விவசாயிகளுக்கு லாபத்தில் பங்குத்தொகை 14 கோடியை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டு சத்தியமங்கலம் கரும்பு விவசாயிகள் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் ..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கரும்புகள் வழங்கிய விவசாயிகளுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி 1966 சட்டப்படி 5 ஏ லாபத்தில் பங்குத் தொகையான 14 கோடியை உடனே வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க தலைவர் சதீஷ்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தனியார் சர்க்கரை ஆலைகள் உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்த பொழுது, லாப பங்கு தொகையை சட்டப்படி தர வேண்டும் என 2024 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் 14 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என மாநில சர்க்கரை துறை ஆணையம் ஒவ்வொரு ஆலைக்கும் தனி தனியாக கணக்கிட்டு உத்தரவை வழங்கியது. அதன் அடிப்படையில் 14 கோடியை வழங்காமல் கடந்த ஒரு வருடமாக இழுத்தடித்து வருவதாக கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை கண்டித்து சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான விவசாயிகள் கரும்புகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்