சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் இயங்கி வந்த அரசு கதர் சாய சலவை அச்சு தொழிலாளர்களுக்கு நீதிமன்ற தீர்ப்புப்படி வழங்க வேண்டிய 65 லட்சம் ரூபாயை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகரில் தமிழக அரசின் சார்பில், 8 ஏக்கர் நிலப் பரப்பளவில், 1975 ஆம் ஆண்டு, பவானிசாகர் சாய சலவை அச்சு தொழிற்சாலை இயங்கி வந்தது. 100 தொழிலாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த சாய சலவை தொழிற்சாலையில் இருந்து அரசு துறைகளான ரயில்வே, மருத்துவமனை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான சீருடைகள் ஆகியவற்றை தயாரித்து அனுப்பி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தொழிற்சாலை மூடப்பட்டது. 2003 முதல் இந்த தொழிற்சாலை பயனற்று, முட்புதர்கள் சூழ்ந்து, சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இருந்து வருகிறது.
தொழிற்சாலையில் பணிபுரிந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள மாறும் அகவிலைப்படி தொகையான ரூபாய் 65 லட்சத்தை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 65 லட்சம் ரூபாய் அகவிலைப்படி தொகையினை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் கடந்த 11 வருடங்களாக அகவிலைப்படி தொகை 65 லட்சம் இதுவரை வழங்கப்படாததை கண்டித்தும், பயனற்று கிடக்கும் தொழிற்சாலையை திறந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், ஆலைத் தொழிலாளர்கள் இன்று பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
சத்தியமங்கலம் செய்தியாளர்
மகேஷ்பாண்டியன்