யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தங்களுடைய ஆதரவுகளை நல்குகின்றார்கள்.வரலாறு நெடுகிலும் யாழ்ப்பாணம் தமிழ்பேசும் மக்களின் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாக இருந்து வந்திருக்கின்றது. இங்கு வாழ்கின்ற இந்துக்கள், கிறிஸ்த்தவர்கள், இஸ்லாமியர்கள் தமிழ் மொழியால் ஒன்றிணைந்தவர்கள். காலாதிக்கலாமாக இந்த உறவு நிலைபெற்றே வந்திருக்கின்றது. இடையிடையே ஏற்படுகின்ற அரசியல், சமூக ரீதியான பிணக்குகள் இங்கு வாழ்கின்ற மக்களை ஒருபோதும் நிரந்தரமாக பிரித்தாண்டது கிடையாது. மக்கள் எப்போதும் மனிதர்களாக, மனிதாபிமானம் உள்ளவர்களாக, நல்லிணக்கத்தோடே இருந்து வருகின்றார்கள்.இந்நிலையில் வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் 1990 பலவந்த இனச்சுத்திகரிப்பின் பின்னரும் தமிழ் மக்களுடனான அந்நியோன்ய வாழ்வை தொடரவே விருப்பத்தோடும், அர்ப்பணிப்போடும் இருக்கின்றார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை புறந்தள்ளாமலும், அதற்கு வலுச்சேர்க்கும் விதமாகவும், வடக்கு முஸ்லிம் மக்கள் தங்களது அரசியல் ரீதியான நகர்வுகளை முன்னெடுத்தல் சிறப்பு என்பதே, இங்கு வாழ்கின்ற பெரும்பாலான தமிழ்பேசுகின்ற முஸ்லிம் மக்களின் நிலைப்பாடாக இருந்துவருகின்றது. ஆனாலும் இந்த எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் விதமான பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்தேயாகவேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்படுகின்றது.‘பிரிபடாத நாட்டுக்குள் சமஷ்டித்தீர்வு’ என்பதே இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வாக இருக்கமுடியும் என்பது எமது நம்பிக்கை அந்தத் தீர்வினை தன்னுடைய அரசியல் இலக்காகக் கொண்டுருப்பது இலங்கை தமிழ் அரசுக் கட்சி மாத்திரமே. எனவேதான் இலங்கை முஸ்லிம் மக்கள் அன்றுதொட்டு இன்றுவரை தந்தை செல்வாவையும் அவரது அரசியல் போக்கினையும் தொடர்ந்தும் மதிக்கின்றார்கள், அவரோடு இணைந்த அரசியலை முன்னெடுக்கிறார்கள்.இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. புதிய ஜனாதிபதி பதவியேற்றுள்ளார். ஊழல்மோசடிகளுக்கு எதிரான நிலைப்பாடுகள் அவரை மக்கள் ஆட்சிபீடமேற்றுவதற்கான மிக முதன்மையான காரணியாகும், அதனைத் தொடர்ந்து இடம்பெறுகின்ற பாராளுமனறத்திலும் அவரது கட்சியே ஆட்சியமைக்கும் எனவும் பரவலாக எதிர்வு கூறப்படுகின்றது. இருந்தபோதிலும் வடக்கு முஸ்லிம் மக்கள் ஜனாதிபதியின் காட்சியாகிய தேசிய மக்கள் சக்தியோடு இணைந்து பயணிக்கும் நிலையில் இல்லை. அதற்கான மிக அடிப்படையான காரணம், சிறுபான்மை மக்களின் அரசியல் விடுதலைக்கான கோரிக்கை குறித்த அவர்களது தெளிவற்ற நிலைப்பாடுகளேயாகும்.எனவே மேற்சொன்ன அடிப்படைகளில் இம்முறை வடக்கு மாகாண முஸ்லிம் மக்கள் பொதுவாகவும், யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம் மக்கள் குறிப்பாகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு தங்களது ஆதரவை நல்குவது என தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களையும், முன்னாள் யாழ் மாநகரசபை முதல்வர் இம்மனானுவல் ஆனல்ட் அவர்களையும் மற்றும் பெண் வேட்பாளர் பொறியியலாளர் கிருஷ்ணவேணி சிறிதரன் அவர்களையும் ஆதரிப்பது என யாழ்ப்பாண முஸ்லிம் வட்டார மக்கள் தீர்மானிக்கின்றார்கள்.யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட முஸ்லிம் மக்கள் 2024 பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிப்பர்.தமிழ் பேசும் மக்களாக ஒன்றிணைந்து பலமாக எழுவோம்.
ஊடக அறிக்கை வெளியீடு
13ஆம் வட்டார மூலக்கிளை - இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி